வேலூர்: துரைப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டும் பயிலும் மாணவர்கள் தினேஷ் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரும் கல்லூரி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழே வந்துகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நிறுத்தி மாணவர்களை மிரட்டி அவர்களுக்கு ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதில் மாணவர்கள் தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளது தலைக்கவசம் அணிந்துள்ளோம் பிறகு ஏன் அபராதம் விதித்துள்ளீர்கள் எனக் கேட்டனர். அதற்கு ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவர் தினேஷின் கண்ணத்தில் ஓங்கி பளார் என அறைந்துவிட்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த மாணவனின் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் உடன் படிக்கும் சக மாணவர்கள் காவல் துறையினரின் அராஜகத்தின் உச்சத்தைக் கண்டித்துக் கோபமுற்றனர். இதனால், அவர்கள் மாணவனைத் தாக்கிய காவல் ஆய்வாளர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அராஜக செயல் புரிந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் செய்வதறியாது திகைத்து நின்றார்.
பின்னர் மாணவர் தினேஷும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் தாக்கியதில் பல் ஒன்று ஆடியதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
இதையும் படிங்க: சென்னை அருகே மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்!