காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை பெரும்பாலான கிராமங்களில் அறுவடை செய்து முடித்து விட்டனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசு, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுச் செல்ல முடியவில்லை. மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்த நெல் முட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன. அவ்வப்போது மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நெல் முட்டைகள் வீணாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 முட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், ஏற்கனவே நெல் கொள்முதலுக்கு தரும் விலையை விட தற்போது அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில்:-
வாலாஜாபாத் சுற்றியுள்ள ஊத்துக்காடு நெய்குப்பம், புத்தகரம் கிதிரிப்பேட்டை, நாயக்கன்குப்பம், பூசிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளோம். இந்த முறை நெல் சாகுபடி அதிகப்படியாக விளைச்சல் வந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 நெல் மூட்டைகள் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2500 மூட்டைகள் வரை அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும். ஏற்கனவே கொள்முதல் செய்யும் விலையை விட இந்த முறை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் விவசாயிகள் ஓரளவுக்காவது மீண்டு வரமுடியும். மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.