ஈழுவா, தீயா என்ற பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பெற்றுகொண்ட அந்த சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈழுவா, தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் கூறுகையில், "தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழுவா, தீயா சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை எங்கள் சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சார்ந்த அரசு உதவிகள் உரிய அங்கீகாரம் பெற தடையாக இருந்தது. இதனால், எங்களது சமூதாய மக்கள் பல தலைமுறைகளாக பட்டதாரிகள் இல்லாத சமுதாயமாகவும், சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கியும் இருந்து வந்தனர்.
தமிழ்நாடு ஈழுவா, தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது கோரிக்கைகளை வைத்திருந்தோம். தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட எங்களது சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்க்க அரசுகளை வலியுறுத்தி வந்தோம். எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக 2011ஆம் ஆண்டு வழங்கினார்.
இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எங்களை பலமுறை கோவையில் அழைத்து, கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் சமூகத்தினரை இரண்டு முறை நேரில் அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டேர், சிறுபான்மையினர் நலத்துறையுடன் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்திரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈழுவா, தீயா சமூகத்தின் நிர்வாகிகளை அழைத்து, எங்கள் சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலில் இணைத்து, அதன் சரித்திர புகழ்வாய்ந்த அரசாணையை வழங்கினார். இந்த நேரத்தில் ஈழுவா, தீயா சமூக மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.