நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாய் கழகமான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரது வரிசையில் அமமுக மாநில அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஞானசேகரன் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சிறந்த ஆளுமையாக விளங்கும் ஸ்டாலினின் தலைமையையேற்று திமுகவில் இணைந்திருப்பதாகவும், பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் சிறந்த தலைவராக ஸ்டாலின் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெறச்செய்வதே தங்களின் முதல் பணி என கூறிய ஞானசேகரன், அமமுகவில் அமைப்பும் இல்லை, தலைமையும் இல்லை எனவும் விமர்சித்தார்.