சென்னை: விழுப்புரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை ராயபுரம் எம்ஜிஆர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை அழிக்கும் வகையில் திமுக செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் பெயர் அமைச்சர் பொன்முடியின் கண்ணை உறுத்துகிறது. அதிமுகவை அழிக்க கருணாநிதி காலத்திலேயே பல வித்தைகள் காட்டப்பட்டன. கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்கமுடியாதபோது, அவர் மகனால் முடியுமா?
இந்த அடக்குமுறைக்கெல்லாம் அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல. கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா? திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வெட்டுகளை அடித்து நொறுக்குகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை மக்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது. அசைக்கவும் முடியாது" என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சாலை மறியல்