சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நான்காவது நாளான நேற்று (ஆக.19) திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்தில் கோடநாடு விவகாரம், உறுப்பினர்களின் கோரிக்கை, நெடுஞ்சாலை சீரமைப்பு உள்ளிட்ட விவாதங்களும் நடைபெற்றன.
இந்தப் பேரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், "நேற்றும் (ஆக.18), இன்றும் (ஆக.19) சட்டப்பேரவையில் பிரதான எதிர்கட்சியான அதிமுக இல்லாதது கெடுவாய்ப்பானது.
புளியந்தோப்பு விவகாரம்
அடுத்த ஆறு மாதத்திற்கான நிதிநிலை தாக்கல் குறித்து அதிமுக கேள்வி கேட்டிருக்க வேண்டும். தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநடப்பு செய்தது வேதனையளிக்கிறது. சென்னை புளியந்தோப்பில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடம் தரமற்றதெனக் கூறப்படுகிறது.
எனவே, இதேபோல் அரசு சார்பில் திருச்செங்கோட்டில் கட்டப்பட்டுள்ள 840 வீடுகள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் சொன்னது வரவேற்கத்தக்கது.
தனியாக நாம் வீடு கட்டினால் நூறு ஆண்டுகள் வரை வருகிறது. அரசு கட்டினால் பத்து ஆண்டுகள் வரை மட்டுமே நிலைக்கிறது. இதன் காரணமாக கூடுதல் செலவினம் அதிகமாகி நிதி வீணாகிறது. இதனால், பத்து மடங்கு செலவு கூடுதலாகிறது.
லஞ்சத்தை திருப்பி கொடுக்கவும்...
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகள் பெறுவதற்காக கையூட்டு வாங்கப்பட்டுள்ளது. அதனை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு லட்சம் கோடி பொருளாதாரம் (One Trillion Economy) என்பதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் இலக்கு. தமிழ்நாட்டில் ஏற்றுமதியையும உற்பத்தியையும் அதிகரித்தால்தான் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். அதை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
அறிவிப்புகளுக்கு வரவேற்பு
அவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி செய்தியாளர்களிடம் பேசியபோது, 110 விதியின்கீழ் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்ததற்கும், குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை தடுப்பதற்கு ஆய்வு செய்ய நடவடிக்கை, பனை மரத்தை வெட்டுவதைத் தடுக்க சட்டம், கரும்பு ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவற்றுக்கு வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்