சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன் (45)-தில்லை கனி (40) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் மாற்றுத்திறனாளி. இரண்டாவது மகன் சரவணன் (20) ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
இதற்கிடையில் கரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்ததால் கே.கே. நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் சரவணன் பணிபுரிந்துவந்துள்ளார். வழக்கம்போல் நேற்று (டிச.15) சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் இரும்புப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு கடைக்கு டெலிவரி செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது பரங்கிமலை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வாகன ஓட்டிகள் பரங்கிமலை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பரங்கிமலை காவல் துறையினர் சரவணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்!