பொறியியல் படிப்புகளில் வரும் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு, முதலாம் ஆண்டு வகுப்புகள் காலதாமதமாகவே தொடங்கப்பட்டன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து 2ஆம் கட்ட கலந்தாய்வினை ஜூலை 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இறுதிச்சுற்று கலந்தாய்வினை ஜூலை 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் ஜூலை 30 ஆம் தேதிக்கு முன்னதாக கல்லூரிகளில் சேர்க்கப்பட வேண்டும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் காலியாக இடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் மட்டுமே சேர்க்கலாம். இந்த தேதிக்கு பின்னர் மாணவர்களை சேர்க்கக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா காரணமாக ஆன்லைன் வழிக் கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆன்லைன் வழிக் கல்விக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் - மத்திய அரசு