சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக இன்று காலை 7 மணி முதல் சென்னை, திருச்சி, திண்டுக்கல், சேலம், கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை மேலாளர் விக்டர் நாகராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றுள்ளனர். அப்பொழுது, வீட்டில் யாரும் இல்லாததால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அவர்கள் வந்த பிறகு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என்றும், அவர்கள் வரவில்லை என்றால் வீட்டிற்கு சீல் வைத்து விட்டு அவர்கள் வந்த பிறகு வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சண்முகராஜ் அண்ட் கோ என்கிற சார்ட்டர் அக்கவுண்டட் நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை முகப்பேர் பகுதியில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொழில்முறை தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள்,தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு சொந்தமான இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில், அரசு ஊழியர்கள் தொடர்பில் இருந்தார்களா என்ற கோணத்தில் அவர்களின் இல்லங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் பிற மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் எனப்படும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமலாக்கத்துறை சோதனைக்கான முழு காரணத்தை இன்று மாலை அதிகாரிகள், அறிக்கையாக வெளியிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் திடீர் அமலாக்கத்துறை சோதனை... தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு!