கரோனா தொற்று பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தவர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தபால் வாக்குகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் சென்னையில் உள்ள அம்மா மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ், "இக்கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.
நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தத் தபால் வாக்கு முறை, முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையின்மை அல்லது வேறு ஏதேனும் உடல் நல குறைபாட்டின் காரணமாக வாக்களிக்க முடியாத நிலைமை இருந்தால் ஒருவரின் உதவியுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
மேலும், அங்கு வரும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு நாளை (மார்ச் 26) முதல் தொடங்குகிறது. தபால் வாக்கு செலுத்தப்படும் நிகழ்வு முழுமையாக வீடியோ எடுக்கப்படும். தபால் வாக்கு சேகரிக்க 70 குழுக்கள் உள்ளன. ஒரு நாளுக்கு 15 வாக்குகள் மட்டுமே சேகரிக்கப்படும். 7 நாள்களுக்குள் இப்பணி முடிவடையும்.
தபால் வாக்கு செலுத்த ஒருவருக்கு 2 முறை வாய்ப்பு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தத் தவறினால் அவரால் வாக்கு செலுத்த முடியாது. தினந்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரையிலும் 2646 புகார் தேர்தல் சம்பந்தமாகத் தரப்பட்டுள்ளது. 1644 புகாருக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஞ்சல் வாக்குக்கு 7,300 நபர்களுக்கு அனுமதி - சென்னை மாநகராட்சி ஆணையர்