வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் விக்கரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி உடல்நல குறைவால் இறந்ததால் அந்த தொகுதியும், பாண்டிச்சேரி தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததால் இந்த தொகுதியும் காலியென அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடக்கும். வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 1 தேதி, வேட்புமனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ஆம் தேதியும் கடைசி நாள். இதைதொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வாறாக வேலூர் தேர்தல் முடிந்த அடுத்த ஒன்றரை மாத காலத்துக்குள் அடுத்த தேர்தல் அறிவிப்பு வந்துள்ளதால் தமிழக அரசிய கட்சிகளிடையே தேர்தல் ஜுரம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் முடிவு வெளிவந்த 2 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி வருவதால் இந்த வருடத்தில் 'வெற்றி தீபாவளி' தங்கள் வசமாக வேண்டும் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.