சென்னை: 2019 மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைத் தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்துவது, ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிடுவது, ஓலா, உபர் போர்ட்டர் ரெட் டாக்ஸி, ஃபாஸ்ட் ட்ராக் போன்ற செயலி வடிவில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்துவது, ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைப்பது, ஆட்டோக்களை போன்று கால் டாக்ஸிகளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.
சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசின் வரி வருவாய் என உறுதி செய்வது, இரண்டு சக்கர டாக்ஸிகளை தமிழகத்தில் தடை செய்வது, தமிழகத்தில் காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக அகற்றுவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய போராட்டத்தை உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த கோரிக்கைகளை தழிழக அரசு உடனே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் அப்படி இல்லாதபட்சத்தில் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதன்படி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து, அக்.16, 17, 18 ஆகிய மூன்று தினங்களுக்கு மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மேலும், 16 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள போர்ட்டர் நிறுவனம் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் செய்வதென்றும், அதை தொடர்ந்து 17 ஆம் தேதி மதுரை, திருச்சி, கோவை போக்குவரத்துத் துறை இணை ஆணையர் அலுவலகங்கள் முன்பு போராட்டமும், 18 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டத்தையும் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பெரும்பான்மையான மக்கள் அலுவலகம் செல்லவும், மற்ற பணிகளுக்குச் செல்லவும் அதிக அளவில் வாடகை ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உரிமை குரல் ஓட்டுரநர் சங்கம் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குறைந்த வட்டிக்கு பணம் எனக்கூறி ரூ.16 லட்சம் மோசடி.. காவல் நிலையத்தை முற்றுக்கையிட்ட மக்கள்.. சென்னையில் நடந்தது என்ன?