மோசமான நிதி நிலை காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லஷ்மி விலாஸ் வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வைப்புத் தொகை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கும் நிலையில், முன்னாள் கனரா வங்கித் தலைவரும் லஷ்மி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கியால் சிறப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள டி.என் மனோகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர், ”லஷ்மி விலாஸ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. டிசம்பர் 16ஆம் தேதிக்குள் இதற்கு தீர்வு காணப்படும். லட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லட்சுமி விலாஸ் வங்கியில் 4 ஆயிரத்து 100 ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். வங்கி இணைப்பிற்கு பின்னரும், அவர்கள் அனைவரும் இதே நிலையில் பணியில் நீடிப்பர். அவர்களுக்கான சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். சம்பள நிறுத்தம் இருக்காது. தற்போது பணமெடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாதம் 25 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும். மருத்துவம், திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக மட்டும் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
வங்கியின் வாடிக்கையாளர்கள், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும். வைப்பு தொகை வைத்திருப்போர் நலனிற்காவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடு டிசம்பர் 16ஆம் தேதி வரை அமலில் இருக்கும்” என்றார்.
வங்கியில் வர்த்தகம், சேமிப்பு என எந்தமாதிரியானக் கணக்குகளை வைத்திருந்தாலும் ஒரு நபர் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் இருப்பவர்கள் 5 லட்ச ரூபாய் வரை எடுக்க முடியும். வங்கியின் நிதி உறுதித் தன்மையை பாதுகாக்கும் வகையில் ரிசர்வ வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உறவினர் திருமண செலவிற்கு பணம் எடுக்க முடியவில்லை - லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர் குமுறல்!