சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். திமுக மக்களுக்கு செய்த சாதனைகளால் மக்கள் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அதற்கு அங்கீகாரமாக இந்த தேர்தல் வெற்றி அமையும். மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தான் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், திமுக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் சான்றாக தேர்தல் முடிவு அமையும் என்று கூறினார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மீனவ பெருமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மீனவ பெருமக்கள் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர். மெரினா கடற்கரையில் அமைய உள்ள இந்த சின்னத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அப்பகுதியில் உள்ள மீனவர்களும் அறிந்துள்ளனர். மீனவ பெருமக்களுக்கு ஆதரவாக ஏதோ பேச வேண்டும் என்ற வகையில் இந்த பிரச்சனையை பூதாகரமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எந்த நினைவாக இருந்தாலும் தமிழக மக்களின் மனதில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறையாது. அந்த அளவிற்கு சாதனைகளை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்துள்ளார். தமிழ்நாடு அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளில் குறிப்பாக கல்வி, சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட எல்லாவற்றிலும் முன்னிலை பெற்ற மாநிலமாக விளங்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது.
அவரது பேனாவின் வலிமை குறித்து அனைவரும் அறிவார்கள். ஒரு எழுத்தாளராக கவிஞராக மிகச் சிறந்த ஆட்சித் திறன் செய்யக்கூடிய வல்லமை படைத்தவராக அவர் ஆற்றிய பணிகளை மக்கள் அறிவார்கள். அவருக்கென்று அமைக்கப்படும் நினைவுச் சின்னம் எதிர்கால தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தான் இருக்கும்.
கடலில் ஒரு இடத்தை மண் கொட்டி நிரப்பி அங்கு பேனா சின்னம் அமைப்பதால் கடலையே நாம் தூர்த்து விடுகிறோம் என்ற வகையில் செய்தியை பரப்பி வருகின்றனர். சிங்கப்பூரில் கடலில் மண் கொட்டி பெரிய துறைமுகம் அமைத்துள்ளனர். அந்த துறைமுகம் ஆசியாவிலேயே பெரிய துறைமுகம் என கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகள் தங்களது கட்டுமான பணிகளில் பெரும்பகுதியை கடலில் செய்து வருகின்றனர். அங்கு இருக்கும் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்கே ஒரே ஒரு நினைவு சின்னம் அமைகிறது என்பதற்காக இவ்வளவு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள் என்றால் அவர்களுக்குள் இருக்கும் வன்மத்தை இது காட்டுகிறது.
ஒரு இயக்கத்தின் தலைவராக கருணாநிதியை பார்க்காமல் தமிழினத்தின் தலைவராகவும், வழிகாட்டியாகவும், தமிழினம் மேம்படவும், மொழிக்காகவும் பாடுபட்ட சிறந்த தலைவராக பார்த்து, தமிழர்களின் பெருமை சின்னமாக பார்த்து இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது தேவையற்ற ஒன்று என கருதுகிறேன்.
எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கூற்றுப்படி அரை ஏக்கர் நிலம் இதற்காக தூர்க்கப்படுகிறது எனக் கூறுகின்றனர். ஆனால் சிறு துறைமுகங்கள் மற்றும் தூண்டில் வளைவு வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழ்நாட்டில் தூண்டில் வளைவு மற்றும் சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு கடலில் கட்டுமான பணிகளை செய்து தான் செய்ய வேண்டும்.
அப்பொழுது பாதிப்பு ஏற்படாதா. மேலும் சீமான் போன்றவர்கள் இந்த ஆட்சியில் எந்த சாதனையை பாராட்டியுள்ளனர். அவருக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.