தாம்பரத்தை அடுத்த படப்பை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் ஸ்விகியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யாவை பிரசவத்திற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி சேர்த்துள்ளார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் வினோத்குமார் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்துள்ளார்.
இதனிடையில் நேற்று நள்ளிரவில் வினோத்குமார் படுத்து தூங்கிகொண்டிருந்த போது குழந்தைகள் நல மருத்துவர் தமிழரசன் தன்னுடைய காரை பின்புறம் எடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக தூங்கி கொண்டிருந்த வினோத் குமாரின் காலில் கார் ஏறியதில் வினோத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் வலியால் துடித்த அவரை மருத்துவர் தமிழரசன் தனது காரிலேயே அழைத்து சென்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வினோத் குமார் படப்பை வீட்டிற்கு சென்று விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எந்த புகாரையும் அவர் கொடுக்கவில்லை. புகார் எதுவும் அளிக்கவில்லை என்று வினோத்குமார் எழுதி கொடுத்துவிட்டு சென்றதாக எழும்பூர் காவல் துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்திகள் எதிரொலி: ம.பி.யிலிருந்து காரைக்கால் மாணவர்கள் 17 பேர் மீட்பு!