சென்னையில் உள்ள 'நிழல்' அமைப்பின் அறங்காவலர் டாக்டர் T.D. பாபு பேசுகையில், 'சென்னையில் உள்ள மரங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிக்க சென்னை பெருநகர மாநகராட்சி தவறியுள்ளது. சென்னையில் மரங்கள் விழுவது புதிதல்ல. கடந்த காலங்களில் நிறைய மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. எனினும், மரங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும்போதுதான் இது வெளிச்சத்திற்கு வருகிறது.
இதற்கு சென்னை பெருநகராட்சி மரங்கள் விழாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். மரங்களின் கிளைகளை வெட்டும்போது அவைகள் விழாத வண்ணம் களைய வேண்டும். மரங்கள் விழுவதற்கு நிறைய காரணிகள் உள்ளன. குறிப்பாக, கான்கிரீட், பராமரிப்பின்றி நோய்வாய்படுதல் உள்ளிட்ட நிறைய காரணங்கள் உண்டு.
சென்னை பெருநகராட்சி வனத்துறையில் உள்ள திறமையான ஊழியர்களை நியமித்து மரங்களைக் கண்காணிக்க வேண்டும். சென்னையில் மரங்கள் வளர்ப்பதை சவாலாக, நாமே மாற்றியுள்ளோம். சென்னை ஒரு காலத்தில் நீர் மற்றும் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புரிதல் இல்லாமல் சரியான மரங்களை சரியான இடத்தில் நடுவதில்லை.
உதாரணமாக ஆலமரங்களை சாலைகளின் ஓரங்களில் வைப்பது. ஆலமரத்தின் வேர்கள் என்பது பெரிய நிலப்பரப்பில் போகும், இவைகளை பெருநகரத்தில் வைத்தால் இந்த வேர் எப்படி பரவும்.
சென்னையில் கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதற்கு நகரத்தில் பெரிய மரங்கள் இல்லாததே காரணம். சென்னையில் 2016இல் ஏற்பட்ட வர்தா புயலில் 99 விழுக்காடு அயல்நாட்டு மரங்கள் விழுந்துள்ளன' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை பெருநகராட்சியின் தலைமை பொறியாளர் (பொது) ராஜேந்திரனிடம் கேட்டபோது, "சென்னை பெருநகர மாநகராட்சி மரங்களை நல்ல முறையில் பாதுகாத்து வருகிறது. சென்னையில் 33,500 தெருக்கள் உள்ளன. மேலும் சென்னையில் சுமார் 1 லட்சம் மரங்கள் சராசரியாக உள்ளன.
இந்த 33500 தெருக்கள் சுமார் 5000 கி.மீ. கொண்டது. சென்னையில் இந்த ஆண்டு 1500 இடங்களில் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு வருகிறது", எனத் தெரிவித்த அவர் ''சாலையோரங்களில் உள்ள மரங்களின் வேர்கள் வீடுகளின் பக்கம் செல்லாது. ஏனெனில் வீடுகளில் கான்கிரீட் உள்ளது. ஆனால், இந்த மரங்களின் வேர்கள் சாலைகள் பக்கத்தில் உள்ள பூமிப்பகுதிகளில் செல்லும்’’ என விளக்கினார்.
''சென்னை பெருநகராட்சியில் மரங்களையும் காப்பாற்ற வேண்டும். மழை நீர் வடிகால்களையும் கட்ட வேண்டும். இதனால் சவால்கள் நிறைய உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் வேர்களை அகற்றித்தான் தான் மழை நீர் வடிகால் கட்ட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிறது.
சில நேரங்களில் பணிகளை எடுக்கும்போது தவிர்க்க முடியாத நிலையில் மரங்களை வெட்டுகிறோம். அதற்குப் பதிலாக மரங்களை நாடுகிறோம். இருப்பினும் மரங்கள் விழாமல் இருக்க கிளைகளை களைகிறோம். மரங்களை இணைத்து பெரிய கயிறு கட்டுகிறோம். மரங்களை வெட்டாமல் என்னென்ன நடவடிக்கைகள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்து வருகிறோம்'' என ராஜேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: 'திராவிட மாடல் என்றால் என் முகம்தான் நினைவுக்கு வரும்' - பூரிப்புடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்