சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறுவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளிக்கும். தேர்தல் பணிகள் குறித்தும் களப்பணிகள் குறித்தும் திமுக தலைவருடன் ஆலோசித்தோம். தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தல் பணிக்குழு நியமித்து விக்கிரவாண்டியில் திமுகவை மகத்தான வெற்றியடையச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழரின் வரலாற்று பெருமையை குறிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி பாரதத்தின் பெருமை என்று கூறியிருக்கும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மோடி அரசுக்கு ஜால்ரா அடிக்கும் செயலாக மூத்தகுடி தமிழரின் பெருமைகளை சில நூறு ஆண்டுகாலம் முன் தோன்றிய இந்திக்காரர்களின் காலில் கொண்டுபோய் வைக்கக்கூடாது என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.
ஐநாவில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறும் மோடி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாரா என்ற திமுக தலைவரின் கருத்தை நான் வழிமொழிகிறேன். சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பவர்களும் கூட தமிழின் பெருமையை உணர்ந்து தமிழை புகழ்ந்து பேசி வருகின்றனர். தமிழுக்கு நானும் தொண்டாற்றுவேன் என்று மோடி கூறினாலும் பாடத்திட்டத்தில் இந்தியை திணிப்பது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மதவாதத்தை திணிப்பது போன்ற திட்டங்களை நாங்கள் விளங்கிக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் ஜெ. ஆசியுடன் பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்!