சென்னை சைதாப்பேட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியம் நேற்று (பிப்.18) காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரான துரைவீரமணியை தொடர்பில்லாத ஒரு வழக்கில் அவர் பெயரை சேர்த்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரைவீரமணியை எதிர்த்து அதிமுக சார்பில் எம்.எம் மூர்த்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் பிப்.8ஆம் தேதி அயப்பாக்கம் பகுதியில் எம்.எம் மூர்த்தியை அடையாளம் தெரியாத சில நபர்கள் வெட்டிக் கொலை செய்ய முற்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அதிமுக தூண்டுதலின் பேரில் இதே வழக்கில் துரைவீரமணியின் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றை காவல் துறையினர் பதிவு செய்து அவரை பொய் வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எம்.எம் மூர்த்தி மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சமயத்தில் துரைவீரமணி அண்ணா நகரில் இருந்ததற்கான அனைத்து சிசிடிவி ஆதாரங்களையும் காவல் ஆணையரிடம் சமர்பித்துள்ளேன். இந்த பொய் வழக்கை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என காவல் ஆணையரை கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்னை வெட்டவந்தவர்களிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி திருப்பி வெட்டிய அதிமுக பிரமுகர்!