சென்னை: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று (ஆக.20) சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது அவர்கள், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 'திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில், 2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினை விரைவில் அறிவிக்க வேண்டும்.
11 விழுக்காடு அகவிலைப் படி
பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து, மீண்டும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தினை கொண்டு வர வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே ஒன்றிய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப்படியினை வழங்கிட உத்தரவிட வேண்டும்.
முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக புனையப்பட்ட நீதிமன்ற வழக்குகள், காவல்துறை குற்றக் குறிப்பாணைகள் மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றை ரத்து செய்திட வேண்டும்.
பணிக்காலமாக வரன்முறை
கடந்த செப்டம்பர் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
ஊதியம் வழங்கிட வேண்டும்
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகள் மூடல்
5,000 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 3,500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தவுள்ள மாநில மாநாட்டில் முதலமைச்சர் தலைமையேற்க ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துகள்