இந்தியா உலக நாடுகளுடன் பல்வேறு தொழில்நுட்ப செயல்பாடுகளில் போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்குச் சென்றாலும், இன்றளவுவரை மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமையான செயலக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. பல்வேறு திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கும் மத்திய, மாநில அரசுகளும் இந்த அவல நிலையை மாற்ற தடை மட்டும் விதித்துவிட்டால் போதும், இத்தகைய செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்கச் செய்வதற்கு தனக்கு சம்பந்தம் இல்லை என நினைத்துக் கொண்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.
நாட்டிலேயே இத்தகைய கொடுமையான செயல்கள் இனியும் மனிதர்களைக் கொண்டு நடைபெறக்கூடாது என எண்ணி, மனித கழிவுகளை அள்ள கேரள அரசு ரோபா போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தியது. இருந்தபோதிலும், மற்ற மாநிலங்கள் இவற்றில் அக்கறைக் காட்டுவதாய் இல்லை.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை மக்கள் மதிப்பது இல்லை என்று தெரிந்தும், விஷவாயு தாக்கினால் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் உயிர் பிரியலாம் எனத் தெரிந்தும் இவர்கள் இந்த ஆபத்தான பணியைச் செய்கின்றனர். விளைவு இந்த கரோனா ஊரடங்கில் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்திருப்பதும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிடுகையில், மனித கழிவுகளை மனிதனே அள்ளும்பொழுது நிகழும் உயிரிழப்புகளில் 2013-2018ஆம் ஆண்டுவரை முதலிடம் பிடித்த தமிழ்நாடு, மீண்டும் 2020-இல் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம்!
1993-லேயே தடை விதிக்கப்பட்டும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. அதற்கு எனது கண்டனங்கள். மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.