தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை - மகன் இருவர், காவல் துறை விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணம் அடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், மாநில காவல் துறைக்கும், அரசிற்கும் எதிர்க்கட்சியான திமுக கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்துகொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல் துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.
மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.