நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இதன் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, பரிசோதனை மேற்கொண்டு உடனுக்குடன் முடிவுகளைப் பெறக்கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவில் இல்லை என்பதால், சீனாவிடம் இருந்து இதனை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன்படி, சீனாவில் இருந்து 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவற்றில் 24 ஆயிரம் கிட்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முன்வந்ததாகத் தெரிகிறது.
பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இந்த மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அப்படி ஏதும் வந்தடையவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சாலை மார்க்கமாக 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் எத்தனை வாங்கப்பட்டன, என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.
நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.