சென்னை: கரோனா மூன்றாம் அலையைத் தடுக்கும்விதமாக சென்னை மாநகராட்சி சார்பில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி அடிப்படையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு இன்று (ஜூலை 20) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சென்னை மாநகர துணை ஆணையர் (சுகாதாரம் ) மணீஸ் பார்வையிட்டார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்பேரில் அரசு அலுவலகங்கள், கோயம்பேடு சந்தை, மீன் விற்பனையகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரம் நபர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 320 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இணை நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம் | முதல் தவணை தடுப்பூசி | 2ஆம் தவணை தடுப்பூசி |
45 வயதுக்கு மேல் (20,45,447 ) | 15,04,586 | 7,31,120 |
18-45 வயதுக்குள் (35,15,474) | 5,73,683 | 49,267 |
மாற்றுத்திறனாளிகள் (24,282) | 10,435 | 1,171 |
இணைநோய் உள்ளவர்கள் (28,35,886) | 3,85,911 | 1,93,738 |
காசநோய் (1,696) | 282 | 91 |
கர்ப்பிணிகள் (64,152) | 3784 | 88 |
பாலூட்டும் தாய்மார்கள் | 3,739 | 88 |
சென்னையில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இணை நோய் உள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ’மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் சென்னையில் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: இது வைரஸ் சீசனா? மனிதர்களைத் தாக்கும் புதிய 'நோரோ வைரஸ்'