இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார இதழியல் பட்டயப் படிப்பு இந்த ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை வல்லுநர் குழுவை அமைத்து தயார் செய்துள்ளோம். இந்த பட்டயப் படிப்பில் எந்தவொரு பட்டத்தினை பெற்றவர்களும் சேரலாம். ஆனால் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, 3 ஆண்டு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். ஓர் ஆண்டுக்கான பட்டயப் படிப்பிற்கு ரூ.7000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.
இந்தப் பட்டயப் படிப்பில் 8 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். முழுநேரமாக இல்லாமல் பகுதி நேரமாக மாதத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் செய்முறைத் தேர்வுகளும் உண்டு. தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவம் குறித்த செய்திகளை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கும், மருத்துவர்களின் சொற்களை செய்தியாளர்கள் எளிதில் புரிந்துகொண்டு செய்தியினை எழுதுவதற்கும் இந்த பட்டயப் படிப்பு உதவியாக அமையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரேசில் பல்கலை.யுடன் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை ஒப்பந்தம்