ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.04.19
மக்கள் விரோத மத்திய, மாநில ஆட்சிகளையும்;
இரட்டைவேட தி.மு.க.வையும் தோற்கடிப்போம்!
தினகரன்..
அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா அவர்களின் உண்மை விசுவாசிகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரி வாழ் மக்களுக்கும் வணக்கம்!
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... புரட்சித்தலைவியின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பி.ஜே.பி.யிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கித் தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.
தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.யும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல... 'அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை... நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்' என்று பி.ஜே.பி. சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?
ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் & சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதி மன்றம். 'அந்தத் தீர்ப்பை மதிப்போம்' என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், 'இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி' என்று சொன்ன டாக்டர் ராமதாஸையும் மேடையில் வைத்துக்கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த விஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?
இன்னொரு புறம்.. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பி.ஜே.பி.யுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பி.ஜே.பி.யுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?
அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்... காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்னை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.
அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
கடந்த மூன்று வாரங்களாக தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் செய்யச் செல்லும் இடங்களிலெல்லாம் நமது இயக்கத்திற்கு மக்கள் அளித்த ஆதரவும் காட்டிய எழுச்சியும் அபாரமானது, எழுத்தில் வடிக்க முடியாதது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாள் வரை நமக்கு சின்னமும் கட்சியின் பெயரும் கிடைக்க விடாமல், நம்மை அலைக்கழித்ததை தமிழ்நாட்டு மக்கள் வேதனையோடு கவனித்திருக்கிறார்கள் என்பதை நான் போகும் இடங்களில் எல்லாம் அவர்கள் முகங்களில் பார்த்தேன். அதன் விளைவாகத்தான் காலம் தந்த பரிசாக நமக்குக் கிடைத்த ‘பரிசுப் பெட்டகம்’ சின்னம் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, தமிழகத்து வளங்களைச் சூறையாடி, விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் அழிக்க முயற்சிக்கும் மத்திய பி.ஜே.பி. அரசையும்; அம்மாவுக்கும் கழகத்திற்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்து, பல்வேறு முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்பும் பொன்னான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
விவசாயக் கடன் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றம், விவசாயத்தை பாதுகாத்து மேம்படுத்துவது, காஸ் சிலிண்டருக்கு மாதம் தோறும் நூறு ரூபாய் மானியம், கேபிள் டிவி கட்டணக் குறைப்பு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மீனவர், நெசவாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் நான்காயிரம் ரூபாய் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு என மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை நமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்திருக்கிறோம்.
இவற்றை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சுயேச்சைகளாகப் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்கும் வெற்றிச் சின்னமாம் ‘பரிசுப் பெட்டகம்’ சின்னத்தில் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மாநில நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் லாபங்களுக்காக சுயநலக் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வையும், மக்களை மத ரீதியாகத் துண்டாடி, அதன் மூலம் வெறுப்பை விதைத்து ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பி.ஜே.பியையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பி.ஜே.பி.யுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும். இப்படி ஒட்டுமொத்த அவலத்தையும், அசிங்கத்தையும் அப்புறப்படுத்தும் கடமையும், வாய்ப்பும், அதிகாரமும் மக்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
எத்தனை சோதனை வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசம் செய்துகொள்ளாமல், மக்களுக்காக களத்தில் துணிச்சலுடன் நிற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகம் இழந்த பெருமைகளையும், உரிமைகளையும் மீட்டெடுக்கவும்; தமிழகம், புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார தன்னிறைவு பெற்று பாதுகாப்பான, கவுரவமான வாழ்க்கை வாழவும்; தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லவும்; அடிமையாக இருக்கும் தமிழகம் தலை நிமிரவும், அதன் மூலம் தமிழர் வாழ்வு மலரவும் ‘பரிசுப் பெட்டகம்’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி வாழ் மக்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்..