சென்னை மெரினா காந்தி சிலை அருகே சிக்னலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் எல்இடி (LED) சிக்னலை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று (ஆக.15) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், துணை ஆணையர்கள் லட்சுமி, பாண்டியன் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் பங்கேற்றனர்.
இதையடுத்து பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசுகையில், "சாதாரண சிக்னல் முன் பெரிய வாகனங்கள் நின்றால் பின்னால் நிற்கும் வாகனங்களுக்கு சிக்னல் செயல்படும் விதம் தெரியாது. ஆனால் தொலைவில் நிற்கும் வாகனங்களுக்கும் இந்த டிஜிட்டல் எல்இடி சிக்னல் தெரியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சிவப்பு வரும்போது சிக்னல் மின்கம்பம் முழுவதும் தெரியும்படி சிவப்பு எல்இடி விளக்குகள் மின்னும். சோதனை முயற்சியாக இதனை தற்போது மெரினா சிக்னலில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் பல சந்திப்புகளில் டிஜிட்டல் எல்இடி சிக்னல் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அதேசமயம் அண்ணாநகர் சிக்னலில் இருப்பதுபோல் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மற்ற சிக்னல்களிலும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், 193 பகுதிகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து ஊரடங்கை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிரட்டும் தனியார் நிதி நிறுவனர்: தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி!