சென்னை: தல தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லரை தோனி மற்றும் சாக்ஷி இணைந்து நாளை வெளியிட உள்ளனர். காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒவ்வொரு இந்தியர்கள் மனதிலும் தனியிடம் பிடித்தவர். தமிழ் ரசிகர்களை பொறுத்தவரையில் ‘தல’ எனக் கொண்டாடப்படுபவர். இவரது தலைமையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.
இந்த நிலையில் தோனி, முதல் முறையாக தமிழ் படம் ஒன்றை தயாரித்து உள்ளார். இவர் தனது தோனி எண்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘எல்ஜிஎம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது லெட்ஸ் கெட் மேரீட் (lets get married).
இப்படத்தை இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். தோனி என்டர்டெயிண்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல்ஜிஎம்' (லெட்ஸ் கெட் மேரீட்). இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றி இருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்குவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தில் இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இதற்கு பேராதரவு கிடைத்த நிலையில் மேலும், 'எல்ஜிஎம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி, அவருடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த டீஸரும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லரை தோனி மற்றும் சாக்ஷி இணைந்து நாளை வெளியிட உள்ளனர். எல்ஜிஎம் படத்தின் பாடல்களும் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு சென்னை மிகவும் பிடிக்கும் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்த நிலையில் முதல் தயாரிப்பே தமிழில் இருப்பது சென்னை மீது அவர் வைத்துள்ள நன்றி உணர்வை காட்டுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருட்டு பயம்... பவுன்சர்களை பணியமர்த்தி தக்காளி விற்பனை...Thug life வியாபாரி!