சென்னை எழும்பூரில் இயங்கக்கூடிய காவல் ஆணையர் அலுவலக கட்டடம் 178 ஆண்டுகள் மிகவும் பழமையானது. பாரம்பரியமிக்க சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம் கடந்த 2013ஆம் ஆண்டு, வேப்பேரி ஈவேரா சம்பத் சாலையில் உள்ள 8 மாடி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது, பழைய ஆணையர் அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் தமிழக சீருடைப்பணியாளர் தேர்வாணையம், சிபிசிஐடி மற்றும் ரயில்வே காவல் துறை, சென்னை கிழக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் அலுவலகங்கள் கட்டப்பட்டு, புதிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், ஆணையர் அறை மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்கள் அப்படியே உள்ளன. அதனைச் சீரமைத்து காவல் துறைக்கென்று அருங்காட்சியகம் ஒன்று அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் காவல் துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழ்நாட்டு காவல் துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித் தொகுப்புகள், வயர்லெஸ் கருவிகள், காவல் துறை பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை நேற்று(ஜனவரி 11) தமிழ்நாடு காவல் துறை இயக்குநரும் டிஜிபியுமான திரிபாதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
இதையடுத்து காவல் துறை உயர் அலுவலர்களுடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை மேற்கொண்டார். இந்த அருங்காட்சியகம் வருகிற 26ஆம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை.