சென்னை: காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். அதன் படி, அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்திய காவல்துறையில் முதன்மையாக: அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளக்குகிறது.
60 அத்தியாவசிய உதவிகள்: தமிழ்நாடு காவல்துறையில் குற்றச் சம்பவங்களைக் கண்டறிந்து, தண்டனை வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு புதிதாக காவல் உதவி என்ற பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டது. பொதுமக்களுக்குப் பயன்படும் 60 அத்தியாவசிய உதவிகள் அடங்கிய இச்செயலியை கடந்த 4 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக: இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ பதிவு மூலம் காவல் உதவி செயலியை பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் உடனே பதிவிறக்கம் செய்து பயனடைய அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக ஆபத்துக் காலங்களில் இந்த செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி வீடியோ கேமரா மூலம் சம்பவ இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக காட்டலாம்.
செயலி மூலமாகவே அழைத்து உதவி கோர முடியும்: மேலும், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள் இந்த செயலி மூலம் உதவி கோரி தங்கள் பாதுகாப்பை இரவிலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும், தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து இளம் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை அவர்கள் கண்காணிக்கும் படியான வசதிகளையும் இந்த செயலி மூலம் காவல்துறை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 100, 101, 112 உள்ளிட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவி எண்களையும் இந்த செயலி மூலமாகவே அழைத்து உதவி கோர முடியும் எனவும், சாலை விதி மீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத் தொகையையும் இந்த செயலி மூலமே பொதுமக்கள் செலுத்திக்கொள்ள முடியும் எனவும் வீடியோ பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
இழந்த பணத்தை மீட்க இயலும்: அதுமட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் பொதுமக்கள் அதிகம் ஏமாறும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களையும் சைபர் காவல் நிலையங்களைத் தேடி அலையாமல் இந்த செயலி மூலம் அழைத்து உதவி கோரி இழந்த பணத்தை மீட்க இயலும் எனவும், வெளியூருக்குச் செல்லும்போது தங்களுக்கோ அல்லது பிறருக்கோ ஏற்படும் விபத்து போன்ற அசம்பாவிதங்களைக் கூட இந்த செயலி மூலமே அழைத்து உதவி கோர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஏற்றார்போல் 37 மாவட்டங்களின் காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள், அருகாமையிலுள்ள காவல் நிலையங்கள் அங்கு செல்வதற்கான கூகுல் மேப் போன்ற 60 அத்தியாவசிய உதவிகளை உள்ளடக்கிய காவல் உதவி செயலியைத் தமிழ்நாடு காவல்துறை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்து அவர் இதைப் பதிவிறக்கம் செய்து பயனடைய டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.