அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அக மதிப்பீட்டினை வழங்குவதற்கான அறிவுரைகளை வெளியிட்டுள்ளார்.
- மாணவர்கள் வருகை பதிவிற்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 80 சதவிகிதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
- அதேபோல், மாணவர்கள் படித்தவற்றை புரிந்து கொள்ளும் திறனை அறிவதற்காக உள்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டு 4 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இந்த தேர்விற்கு அந்தப் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாடங்களுக்கு ஏற்ப ஒப்படைவு(Assignment),செயல் திட்டம் (Planing) அல்லது களப்பயன் அறிக்கை (Blue Print) இவற்றில் ஏதாவது ஒன்றினை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்து ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ஒதுக்கீடு செய்து நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கலாம்..
- மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், கணித மன்றம், இயற்பியல் மன்றம், வேதியியல் மன்றம், உயிரியில் மன்றம், வணிகவியல் மன்றம், பொருளியல் மன்றம் ,வரலாற்று மன்றம், தேசிய பசுமைப்படை, நாடக மன்றம், கலாச்சார மன்றம் ,இசை மன்றம் ,நூலக மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம் உள்ளிட்ட 33 தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்புகளில் உள்ளவற்றில் மூன்று செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற்றால் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கலாம்.
- மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீடு மதிப்பெண்கள் குறித்து விவர அறிவிப்பு பலகை (Notice Board) வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வகுப்பாசிரியர் ஒப்படைக்கும் பதிவேடுகளை தலைமை ஆசிரியர் பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் குறித்த பதிவேடுகளையும் தலைமையாசிரியர் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்கப்படும் போது ஆசிரியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தலைமையாசிரியர் மாணவர்களுக்காக மதிப்பெண் வழங்குவதை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
- தொழிற்கல்வி பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25 அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்ற அறிவுரைகளையும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.