கருவூலம் மற்றும் கணக்குத் துறை நிதித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த துறையின் 5 ஆயிரத்து 78 பணியிடங்களில் தற்பொழுது 3 ஆயிரத்து 422 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடப்பாண்டிற்கான 114 இளநிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், புதிதாக பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் சிறப்பாக பணியாற்றி அரசிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பணித் திறன் வளர்த்து கொண்டு பல்வேறு பதவி உயர்வுகளை பெற வேண்டுமென்றும், புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது நிதித்துறை அரசு கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் கருவூல கணக்குத்துறை ஆணையர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.