சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
நேற்று (நவம்பர் 29) நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது இன்று (நவம்பர் 30) மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் டிசம்பர் 2 ஆம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
இதன்காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (01.12.2020): தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
02.12.2020: தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 3 ஆம் தேதி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 4 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொண்ணை அணை(வேலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), பேரையூர் (மதுரை), பழனி (திண்டுக்கல்), கள்ளிக்குடி (மதுரை), சீர்காழி (நாகப்பட்டினம்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), குடவாசல் (திருவாரூர்), சோழவரம் (திருவள்ளூர்), மயிலாடுதுறை (நாகப்பட்டினம்), விரிஞ்சிபுரம் (வேலூர்) , குன்னூர் (நீலகிரி) மழை பெய்துள்ளது. மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்தார்.