தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவப் படிப்பினை முடித்து விட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு முதுகலை படிப்பில் சேர இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அவர்கள் முதுகலை மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்தவுடன் மீண்டும் அரசு பணி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் முதுகலை மருத்துவ மாணவர்களை கலாந்தாய்வு முறையில் நிரப்பாமல் நேரடியாக நிரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து முதுகலை மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்குனர் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய முதுகலை மருத்துவர்கள், "கிராமப்புறங்களில் மருத்துவ சேவை புரிந்து முதுகலை படிப்பில் சேர்ந்த தங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். காலியாக உள்ள பொது சுகாதாரத்துறை, மருத்துவக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தினால் தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடங்களை வழங்க வேண்டும். ஆனால் மருத்துவ கல்வி இயக்குனர் தாங்கள் அளிக்கும் பணியிடங்களில் பணிபுரிய வேண்டும் என கூறுகிறார். எனவே எங்களின் ஒரே கோரிக்கையான கலந்தாய்வை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினர்.