சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு கம்ப்யூட்டர் முறையில் நடைபெற்ற தேர்வின்போது நாமக்கல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர் பூர்ணிமா தேவி கணக்கீடுவதற்காக அளிக்கப்பட்ட வெள்ளைத்தாளை (rough sheet) பயன்படுத்தி கம்ப்யூட்டர் திரையில் தோன்றிய வினாக்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் தேர்விற்கான விதிகளை மீறி தேர்வு முடிந்த பின்னர் வெளியில் வந்த அவர், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர விசாரணை நடத்தியதில், தேர்வு நடக்கும்போது எந்தவிதமான வினாத்தாளும் லீக் ஆகவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தேர்வின்போது விதிகளை மீறி செயல்பட்டுள்ளார் என்பதையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டறிந்துள்ளது.
வதந்தி பரப்பிய தேர்வர் மீது நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்போது தேர்வுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஹால் டிக்கெட்டிலும் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தேர்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவரை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்குத் தடைவிதிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதேபோல், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தேர்வர்களுக்கு விடைகளைக் கண்டறிவதற்கு அளிக்கப்படும் வெள்ளைத்தாளும் தேர்வு மையத்தின் அலுவலர்களால் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிரக் கண்காணிப்பில் நடந்த தேர்வு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 1060 நபர்களை நியமனம் செய்வதற்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வில் முதல் நாளில் இயற்பியல், பிரிண்டிங் தொழில்நுட்பம், துணிநூல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் ஆகியப் பாடங்களுக்கு நேற்று காலையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலையில் ஆங்கிலம், புரொடெக்சன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங், மார்டன் ஆபிஸ் பிராக்டிஸ் ஆகியப் பாடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் எந்தப் பொருளையும் கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வு மையங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சிசிடிவி கேமராப் பொருத்தப்பட்டு, அதன் தலைமை அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகத் தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிபின் ராவத், 12 பேரின் உடல்களுடன் டெல்லி புறப்பட்ட ராணுவ விமானம்!