சென்னை: ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையமாக கொண்ட ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனம் பொது மக்களிடம் ஒரு லட்ச ரூபாய் கட்டினால் மாதம் 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக கிடைத்த புகார் குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: குறிப்பாக முதலீடு செய்த பணத்தை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக லாபத்தை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் பேரிடமிருந்து 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 22 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் பாஜகவில் உயர் பொறுப்பை வாங்கித் தருவதாக நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
இது தொடர்பாக சுமார் 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்து இருந்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையில் ஆர்.கே.சுரேஷ் சுமார் 12 கோடி ரூபாய் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
துபாயில் தலைமறைவு: நடிகர் ஆர்.கே. சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்து கொண்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், துபாய் அரசிடம் எம்.லாக், எனப்படும் பரஸ்பர சட்டத்தின் அடிப்படையில் ஆர்.கே சுரேஷை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கையிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே. சுரேஷின் சொத்துக்களை முடக்குவதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.கே சுரேஷ் சுமார் 12 கோடி ரூபாய் வாங்கியதற்கு ஆதாரம் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சொத்துகள் முடக்கம்: இந்நிலையில் அதற்கு உண்டான விளக்கங்களை விசாரணைக்கு ஆஜராகி அளிக்காதபட்சத்தில் இந்த வழக்கின் ஆவணங்களை பயன்படுத்தி அவரின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ள நிலையில் சட்ட வாய்ப்புகளின் அடிப்படையில் தான் சொத்துகள் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு வழக்கில் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தான் இது என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!