மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்னும் தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்திய துணைக் கண்டத்தில் மேலாதிக்கத்துக்கு எதிராக ஈராயிரம் ஆண்டுகளாக சமரசமற்ற சமமாக புரிந்துகொண்டிருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி.
இந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் சமஸ்கிருதத்தையும், வடமொழியையும்தான் ஆதரிக்கின்றனர். ஆட்சியாளர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆதரித்த போதும் வீழ்ந்துவிடாத எம் தமிழ் மொழி அமித் ஷாவுக்கா வீழ்ந்துவிடும் என்பதை முழங்குகிற ஒரு வரலாற்று மேடை இது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் 90 விழுக்காடு இந்தியில் மட்டுமே நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் இருந்தன. நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு வார்த்தைகூட இந்தி அல்லாத மொழி பேசவில்லை. அந்த 38 நாள்கள் காதில் ஈயத்தை காச்சி ஊற்றியதை போல அடைத்த காதோடு காது ஜவ்வு வீங்கி வெளியே வருவதைப்போல இருந்தநிலையை நாம் பார்த்தோம்.
இந்தியாவின் சட்ட வரைவுகளை ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட பின்பு தான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை மாதமாக இந்தியில் முதலில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்தி சின்ன மொழி. இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிறகு முதன்முதலில் எழுதப்பட்டது தமிழ் மொழியில்தான்.
அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. 'நான் திண்ணயை பிடித்து நடந்தபோது என்னை பிடித்து நடந்த பையடா நீ' என்று இந்தியை பார்த்து ஒவ்வொரு தமிழனும் உரக்கப் பேச வேண்டும். இந்தியில் எழுதுகின்ற குப்பையை போட என் வீடும் தமிழ்நாடும் குப்பை கிடங்கும் அல்ல என்பதை நிரூபிக்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும்" என்றார்.