இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்," இன்று (05.05.2020) மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டது. கோவிட்-19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முடக்கம் செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்து தொலைக்காட்சி முன் காத்திருந்த மக்களுக்கு முதலமைச்சர் உரை பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
தலைநகர் சென்னையிலும், அதன் சுற்று வட்டார மாவட்டங்களிலும் கோவிட்- 19 நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில், வீட்டுக்குள் 40 நாள்களாக முடங்கி கிடக்கும் மக்கள் உணர்வுகளை முதலமைச்சர் பிரதிபலிக்கவில்லை. அன்றாட உணவுத் தேவைக்கு கை ஏந்தி நிற்கும் மக்களுக்கு ஜூன் மாதம் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் அளிக்கும்.
மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது மக்கள் நலனைக் காட்டிலும், மது ஆலைகளின் லாப வேட்டையை பாதுகாப்பது முதன்மை ஆகிவிட்டது. அரசுக்கு வருவாய் தேட மக்கள் உயிர்களை பலியிடவும் தயாராகிவிட்டதை முதலமைச்சர் மௌனம் வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘பசியால் கதறி அழுகிற குழந்தையிடம் கிலுகிலுப்பை உலுக்கிய முதலமைச்சர்’ உரையால் எந்தப் பயனும் இல்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட சிந்தனை இல்லாத அரசால் மக்களுக்கு என்ன பயன்? - திமுக தலைவர் ஸ்டாலின்