கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோகுல் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடுத்தார்.
அதில், “மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த உயிரிழந்தோரின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. ஆகையால் அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது இன்று (டிச.7) நீதிபதிகள் ஆர்.மகாதேவன் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், மடூர் கிராமத்தில் ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயான இடத்தை கண்டறிய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்துவதுடன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளதுடன், விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கவும் அரசு வழிவகை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிப்பதுடன், மத, ஜாதி சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்கவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கழுவேலி ஈரநிலம் இனி பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு