சென்னை: உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு, சம உதவியும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கக் கூடிய சுமார் 1,500 தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படக் கூடிய தினக்கூலியான
424 ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இந்த பணியாளர்களை ஒப்பந்தமயமாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க குழு அமைத்து முடிவு செய்யும்படியும், அதுவரை குறைந்தபட்ச சம்பள சட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஊதியமாக ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரத்து 401 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கடந்த ஜனவரி 7ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜனவரியில் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி இச்சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் குழு அமைத்து முடிவு செய்வதற்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதுடன், அதுவரை இடைக்காலமாக தினக்கூலியை 424 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியில் வாரிசு அரசியலா? - செய்தியாளரிடம் கடுகடுத்த சீமான்