நாடு முழுவதும் இன்று(ஜன.16) முதல் கரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் 3 ஆயிரம் மையங்களில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 166 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கரோனா தடுப்பூசித் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கிவைத்தார்.
தடுப்பூசி செலுத்துவதில் முன் களப்பணியாளர்களுக்கு முதல் கட்டமாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை என 12 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தடுப்பூசி மேல் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக நான் முதலில் போட்டுக்கொண்டேன். நான் போட்டு 30 நிமிடங்கள் மேல் ஆகின்றது.
எனக்கு எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. முன் களப்பணியாளர்கள் ஆர்வமாக தடுப்பூசிப் போட்டுக் கொள்கின்றனர். 25 நபர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 54 நபர்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதேபோல் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தர் சுதா சேஷன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தடுப்பூசி செலுத்தும்போது வலிகூட தெரியவில்லை. முன் களப்பணியாளர்கள் அதிகளவு கரோனா பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுக்குத் தற்போது முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மருத்துவர்கள், விஞ்ஞானிகளை நம்புகள்; வதந்திகளை நம்ப வேண்டாம்'- பிரதமர்