தமிழ்நாட்டில், கடந்த இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:
- அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வராமல், தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருப்பின், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
- ஆக்சிஜன் அளவு 90க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மூன்று வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சையைத் தொடர வேண்டும்.
- வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்தால் அவர்களுக்கு வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கலாம். அவர்கள் தங்களின் உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.