சென்னை: விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லை 'இஸ்ரோ' (ISRO) தொட உள்ளது. ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியடைந்த பின், உலகின் பார்வை இந்தியாவின் மேல் இருக்கிறது. சந்திரயான் -1 முதல் 3 வரையான திட்டத்தில் திட்ட இயக்குநர்காளாக பலர் இருந்து உள்ளனர். அதேப்போல் பூமியில் எப்படி, கனிமவளங்கள் மறைந்து இருக்கிறதோ? அதேப்போல் நிலவிலும் தேட இது ஒரு சகாப்தமாக இருக்கும்.
எப்போதும் 'வானியல் ஆராய்ச்சி'யில் உலகம் நாடுகள் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, நிலவில் ஆராய்ச்சி செய்ய உலகத்தின் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. கடந்த 1958ஆம் ஆண்டில் இருந்து இந்தியா, அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நிலவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன.
இதில் உலக புகழ்பெற்ற 'நாசா'வின் (NASA) கடந்த 64 ஆண்டுகளில் நிலவு ஆராய்ச்சி திட்டங்கள் 40 சதவீதம் தோல்வியைத்தான் சந்தித்தன. உலகில் முதல் முறையாக அமெரிக்கா தான் நிலவு ஆராய்ச்சி திட்டத்தை நடத்த முயற்சித்தது. கடந்த 1958, ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்திய திட்டத்தில் அமெரிக்கா தோல்வியை சந்தித்தது.
1959 ஜனவரி 4ஆம் தேதி லூனா 1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் செலுத்தியது ரஷ்யா. இதனால், நிலவுக்கு விண்கலம் அனுப்பிய உலகில் முதல் நாடு என்ற பெருமைய அந்நாடு பெற்றது. இதைத்தொடர்ந்து 'அப்போலோ 11' திட்டத்தின் மூலம் முதன்முதலக நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தான்.
அப்போலோ திட்டங்களில் 12 பேர் நிலவிற்கு சென்றனர். அதைத்தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவை நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக ஆயுத்தமாக இறங்கின.
விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் வளர்ச்சி: பின்னர் 1975, ஏப்ரல் 19 அன்று முதன் முதலில் இந்தியா தன் செயற்கைகோளான 'ஆரியபட்டா'-வை விண்ணுக்கு அனுப்பியது. அதைத்தொடர்ந்து பல செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. சந்திரனை ஆராய்ச்சி செய்ய தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ 'சந்திரயான்' என்ற திட்டத்தை கையில் எடுத்தது. 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட். 15ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சந்திரயான் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார்.
அதன் பிறகு, ஐந்து ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு 2008, அக்டோபர் 22ஆம் தேதி, 'சந்திரயான்-1' திட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு நவம்பவர் 8ஆம் தேதி சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமான நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 14ஆம் தேதி சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆய்வுக்கலன் நிலவில் இறங்கி, அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான சில ஆதாரங்களை உறுதி செய்தது. பின்னர், ஆக.28-ல் சந்திரயான் -1 திட்டம் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. அதைத்தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு, 2019, ஜூலை 22-ல், 'சந்திரயான்-2' விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
2019, ஆக.20-ல் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் செப்.2-ல் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விக்ரம் லேண்டர் விடுவிக்கப்பட்டது. ஆனால், லேண்டர் நிலவில் இருந்து 2 கிமீ தொலைவில் இருந்த போது கட்டுப்பாட்டு மையத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 2023, ஜூலை14அன்று சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. புவி வட்டத்தின் இறுதி சுற்றுப்பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியுள்ளது.
அதேப்போல், சந்திரயான் -2 இருக்கும் ஆர்பிட்டரை சந்திரயான் -3 பயன்படுத்திக் கொள்ளும். இதைத்தொடர்ந்து, 4 வது முறை சந்திரயானின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டது. இதன்பிறகு திட்டமிட்டபடி இம்மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (SoftLanding) தரையிறக்கப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயானும் தமிழக பெருமையும்: சந்திரயான்-1 திட்ட இயக்குநராக பொள்ளாச்சி அடுத்த கோதவாடியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்ட இயக்குநராக சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக மற்றொரு தமிழர், வீரமுத்துவேல் பணியாற்றி இருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.
உலகமே உற்றுக் கவனித்த சந்திராயன் திட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திட்ட இயக்குநராய் இருப்பது தமிழகத்தின் மேல் உலக விஞ்ஞானிகள் கவனத்தை ஈர்த்துக்கொண்ட இருக்கிறது. அதேபோல், சந்திரயான் -2 திட்டத்தின் போது, இஸ்ரோ இயக்குநராக சிவன் அவர்கள் இருந்ததும், தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.
சேலம் ஸ்டில்ஸ்: சந்திரயான் நிலவில் தரையிறங்கிய பின்னர், தென் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த பகுதி பெரும்பாலான உலக நாடுகளால் அறியப்படாத பகுதியாக இருக்கிறது. மேலும், நிலவில் எலக்ட்ரான்கள் போன்ற ப்ளாஸ்மா குறித்து சந்திரயான் ஆய்வு மேற்கொள்கிறது.
இந்த ஆய்வுக்கான எல்.எல்.வி.எம்.-3 எம்4 ராக்கெட்டின் உந்து விசை இயந்திரத்தில், வெப்பத்தை தாங்கும் 2.3 மில்லி மீட்டர் அளவு கொண்ட குளிர்ந்த உருட்டு தகடுகள் (Cold rolled plates) பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தைத் தாங்கும் இந்த குளிர்ந்த உருட்டுத் தகடுகள் தேவையான தர நெறிமுறைகளுடன் இஸ்ரோவுக்கு சேலம் ஸ்டீல் நிறுவனம் வழங்கியது. சந்திரயான் திட்டத்துக்காக, சேலம் இரும்பாலை தொடர்ந்து 3 முறை, தன் பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவால்கள் நிறைந்த பணி: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து, சந்திரயான்-3 தற்போது இஸ்ரோவுக்கு சவால் நிறைந்தாக இருந்து வருகிறது.
பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலவு சுற்றி வருகிறது. அங்கு ஈர்ப்பு விசை பூமியுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவாக இருக்கும். மேலும், காற்று மண்டலம் கிடையாது. தரையிறங்க பாராசூட்டுகளை பயன்படுத்த முடியாது. எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடினமானவை.
பூமி தொடர்ந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது. நிலவும், ஒரு இடத்தில் இருக்காது. ஆகவே, அதை கணக்கீடு செய்து ராக்கெட்டை விடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதையும் தாண்டி புதிய முயற்சியாக இஸ்ரோ தென் துருவத்தை தேர்வு செய்தது. இதுகுறித்து சந்திரயான்-1 திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, "தென் துருவத்தில் தரையிறங்குவது, மிகவும் சவால் நிறைந்த இடமாக இருக்கிறது.
தென்துருவத்தில், பல இடங்களில் 9 கிலோ மீட்டர் உயரத்திற்கு மலை இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால், நிலவில் மலைகள், பள்ளம் இவ்வளவுதான் இருக்கும் என்று யூகித்துதான் செயல்பட முடியும். அதன் வேகத்தை பொருத்து, அங்கு இருக்கும் இடத்தை வைத்தும் தான் இருக்கிறது.
உதாரணமாக, நாம் கூகுள் மேப்பில் செல்லும் போதே சில தவறுகள் நடக்கிறது. சந்திராயன்-3 எடுத்த புகைப்படங்கள் வைத்துதான் சந்திரனை நோக்கி நாம் பயணம் செய்து வருகிறோம். இந்நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே, லேண்டர் எந்தப் பகுதியை தவிர்க்கலாம் எது சரியான இடமாக இருக்கும் போன்றவற்றை ஆராய்ந்து படம் எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
சந்திரயான் 1, 2, 3 ஆகிய மூன்று திட்டங்களிலும் 'தமிழர்கள்' திட்ட இயக்குநர்கள்: "இந்த மூன்று திட்டங்களிலும், சிறப்பான திட்டங்கள், நான் இதற்கு முன்னாள் இன்சாட் திட்டத்தில் பணியாற்றியதால், சந்திரன்-1 எனக்கு தரப்பட்டது. அதேபோல், முத்தையா வனிதாவும் திறமையாக செயல்பட்டவர்தான்.
சந்திராயன் -3 திட்டத்தில் வீரமுத்துவேல் இதற்கு முன்னாள் வயது குறைவாக இருந்தாலும், மிகவும் திறமை வாய்ந்தவர். 15 கிலோ எடையிலான சாட்லைட்டை தயாரிக்க மிகவும் உதவியாக இருந்தவர். திறமையால்தான் திட்ட இயக்குநர்காளாக வர முடியும். அப்படி வந்தவர்கள் எல்லாம் தமிழர்களாக இருக்கிறார்கள் என்பது பெருமிதம்.
நிலவில் இந்தியா புதிய சரித்திரம் படைக்குமா?: கண்டிபாக இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் எப்படி, கனிமவளங்கள் மறைந்து இருக்கிறதோ? வளைகுடா நாடுகளில் எப்படி எண்ணெய் வளம் இருக்கிறதோ, கோலார் தங்க வயலில் தங்கத்தின் வளம், ஆப்பிரிக்காவில், வைரத்தின் வளம் என்பதைபோல், நிலவில் கனிம வளங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'இந்தியா'வை தேடிய கொலம்பஸ் தவறுதலாக பார்த்த இடமே 'அமெரிக்கா'. அமெரிக்கா பார்க்க தவறிய இடம்தான் நிலவின் 'தென்துருவம்'. தற்போது இந்தியா, புதிய மைல்கல்லை அடைய இருக்கிறது. இதனை வைத்து, நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் விரைவில் உருவாக்கப்பட வாய்புகள் உள்ளன" என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்திரனை சந்தித்த மனிதர்கள்..! இஸ்ரோ மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது எப்போது?