சென்னை பல்லாவரத்தை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நேற்றிரவு (செப்.3) மூன்று பேர் கொண்ட கும்பல் கஞ்சா புகைத்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து, அவர்களில் ஒருவரை மற்ற இருவர் சேர்ந்து கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், படுகாயமடைந்த நபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் குரோம்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (26) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
சதீஷை கத்தியால் தாக்கியவர்கள், அவரது நண்பர்களான குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (22), கெவின்ராஜ்(26) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் திருநங்கைகளுடன் இணைந்து பல்லாவரம் பகுதியில், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை அழைத்து, அவர்களிடம் கத்தியைக் காட்டி செயின், பணம் பறிப்பு போன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருபவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்லாவரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரவுடியை கொலை செய்ய சதி திட்டம்: 6 பேர் கைது!