தமிழ்நாட்டில், சமீபத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டித்து, காவிச்சாயம் பூசி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை, பச்சை மட்டும் அதாவது இந்துவை தவிர்த்துவிட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மட்டும் இருந்தால் போதுமானது என்ற முடிவுக்கு முதலமைச்சர் வரத் தயாரா என பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது புகாரளித்துள்ளார். புகாரில் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்தது, தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கலகத்தை தூண்டும் வகையில் பேசியதற்கும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், அதிமுக கட்சிக் கொடியில் அண்ணா படத்தை நீக்க வேண்டும் என எஸ்.வி. சேகர் பேச, அமைச்சர் ஜெயக்குமார் அவரை விமர்சித்தார். மேலும், வழக்கு என்று வந்தால் எஸ்.வி. சேகர் பயந்து, பதுங்கி கொள்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.வி. சேகர் மீண்டும் முதலமைச்சரை சீண்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருந்தால் சம்பளத்தைத் திருப்பியளிக்க தயாரா?'