சென்னை: பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (32). கார் ஓட்டுனரான இவர் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றும் இடத்திலிருந்து நாய் ஒன்றை எடுத்து வந்து வளர்த்து வருகிறார். இவரது தங்கை கணவர் சிலம்பரசன் கார்த்தியின் தங்கையைப் பிரிந்து செங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் தனது நாய் அலறும் சத்தம் கேட்டு வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது தங்கை கணவர் சிலம்பரசன் போதை வெறியில் தனது நாயை மரத்தில் கட்டி வைத்து உருட்டுக் கட்டையால் அடித்து துன்புறுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டை விட்டு சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிலம்பரசன் கடுமையாக தாக்கியதில் வளர்ப்பு நாய் பிளாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் கோபமடைந்த கார்த்தி மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து சிலம்பரசனை அடித்து துரத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கார்த்தி சிலம்பரசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோ ஆதாரத்துடன் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் சிலம்பரசன் மீது விலங்குவதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாயை போதை வெறியில் உருட்டுக் கட்டையால் தாக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்களில் 2 கிலோ தங்கம் பறிமுதல்