சென்னை: அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்த்தப்படவேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி:
பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ் கூறியதாவது,'தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த உடன் புதியக் கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது எனக் கோரிக்கை வைத்தோம்.
அதனால், தமிழ்நாட்டில் புதியக் கல்விக் கொள்கையை நுழைய விட மாட்டோம் எனக் கூறி , அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் எம்பில் பாடத்தினை நடத்திட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். அதற்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை தேவை
உயர் கல்வியில் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு, மாணவர்கள் சேர்க்கையில் பொறியியல், மருத்துவம் படிப்பில் உள்ளது போல், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தினால், அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஒரே கல்லூரியில் சேர்வதற்கு 4 விண்ணப்பங்களைப் போடாமல், ஒரே விண்ணப்பத்தின் மூலம் சேர முடியும்.
கடந்தாண்டு முதல் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஒரு விண்ணப்பம் மட்டும் பெறப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது.
ஆனால் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு இது கொண்டுவரப்படவில்லை. எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிக்கும் இதனைக் கொண்டு வந்தால், அரசு ஆட்சிக்கு வந்த உடன் கொண்டு வரும் போது, அதன் கொள்கை அடிப்படையில் மிகவும் சிறந்ததாக இருக்கும்.
அரசு கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி
அரசுக்கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள் மூலம் தரமானக்கல்வி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் பெற்றோர் உயர் கல்வியில் சேர்க்கும் போது, மருத்துவம், பொறியியல் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் தான் சேர்க்கின்றனர்.
தனியார் கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி தருகின்றனர் என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். அரசுக் கல்லூரிகளில் தான் எப்போதும் சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்குத் தரமான கல்வியை ஆசிரியர்கள் அளித்து வருகிறோம்.
அரசுக்கல்லூரிகளிலும், உதவிபெறும் கல்லூரியிலும் தரமான ஆராய்ச்சிகள் பல்கலைக் கழகத்திற்கு இணையாக நடைபெற்று வருகிறது. அரசுக்கல்லூரிகளில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது என்பதை பெற்றோர் உணர்ந்து மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
தற்பொழுது புதியதாகப் பொறுப்பேற்று இருக்கும் திமுக அரசு மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளார். அதனை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை விவாதிப்பதற்காக முதலமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் கோரிக்கையை வலியுறுத்துவோம்’ எனக் கூறினார்.