மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை காலை திறக்கப்படவுள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். முன்னதாக இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியிருந்த அவர் அதில் தனது பயணத் திட்டத்தை குறிப்பிட்டிருந்தார்.
அதில்,"திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.
இன்று திருச்சிக்குப் பயணித்து, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். காவிரிப் பாசனப் பகுதியில் 4,061 கி.மீ. தூரத்திற்குத் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கடைமடை வரை இந்தப் பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, நாளை சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று, அதன்பின் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.
முறையாகத் தூர்வாரி, ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்தோட வழி செய்வதன் வாயிலாக, டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி சிறப்பாக அமையும்" என்று கூறியிருந்தார்.