சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் அங்குப் பெரும் பதற்றம் நிலவுகிறது. உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
அந்தவகையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், புலம்பெயர்ந்த குடும்பத்தினரை மீட்பதற்காக சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 26) பார்வையிட்டார்.
தொடர்ந்து உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் ஸ்டாலின் வாட்ஸ்அப் காணொலி அழைப்பில் பேசி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டறிந்து, விரைவில் மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளரைச் சந்தித்த அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் தமிழர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தொடர்பு அலுவலருமான ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையை நேரில் வந்து பார்வையிட்டார். உக்ரைனிலிருந்து இதுவரை 1800 அழைப்புகள் வந்துள்ளன.
மின்னஞ்சல் மூலமாக மூன்றாயிரம் பேர் தகவல்கள் அனுப்பியுள்ளனர். அனைத்தையும் வெளியுறவுத் துறைக்குத் தகவல் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் மாணவர்கள் குழுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ருமேனியா, போலாந்து நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அங்கு இருக்கும் பல்கலைக்கழகம் உதவியுடன் மாணவர்களை விமான நிலையம் கொண்டுவந்து பிறகு விமானம் மூலம் இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகரில் மட்டும் 400 பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து திண்டுக்கல் திரும்பிய மாணவர்- பெற்றோர் மகிழ்ச்சி