வெள்ளம், வறட்சி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளது. கரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கும் ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்க தொழிலதிபர்கள், தனி நபர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் மக்கள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில் மார்ச் மாதம் முதல், 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளிதழில் ஒன்றில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? உள்ளிட்ட எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே வெளிப்படைத் தன்மையை பேணும் வகையிலும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில் இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனு குறித்து ஜூன் 4ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாமா? - அமைச்சரின் மாறுபட்ட பதில்களால் குழப்பம்!