சென்னை: அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஒவ்வொரு முறை சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, சேலம், கோயம்பத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் போதும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் போதும், அவருடைய ஆதரவாளர்கள் சிலர், சென்னை விமான நிலையம் வந்து, ஓபிஎஸ்சை வரவேற்பதும், வழியனுப்பி வைப்பதும் வழக்கம்.
அதே போல் கடந்த வியாழன் (ஆக.31) அன்று மதியம் ஓ. பன்னீர்செல்வம் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் போது, சென்னை ஆலந்துரைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர் ஒருவர், பி.சி.ஏ.எஸ், தற்காலிக பாஸ் பெற்று ஓ பன்னீர்செல்வத்தை விமான நிலைய லாஞ்ச் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தார்.
பன்னீர்செல்வத்தின் ஆலந்தூர் ஆதரவாளர் வெளியில் வந்த போது, ஓபிஎஸ்ஐ வழி அனுப்ப வந்திருந்த பல்லாவரத்தைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் இருப்பது செங்கல்பட்டு மாவட்டம் எனவே பல்லாவரத்தைச் சேர்ந்த நாங்கள் தான், பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் வழி அனுப்பவுவோம், வரவேற்போம். ஆலந்துரைச் சேர்ந்த நீங்கள் எல்லைத் தாண்டி, வரக்கூடாது என்று எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் ஓ. பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். வழக்கம் போல் ஆலந்தூர் பகுதி சேர்ந்த ஒருவர் பி.சி.ஏ.எஸ் பாஸ் வாங்கி உள்ளே சென்று, பன்னீர்செல்வத்தை அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பினார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்க வந்த அவருடைய பல்லாவரம் ஆதரவாளர்கள், ஆலந்தூர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் நடந்தது.
உடனடியாக அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். மேலும் இது போல் விமான நிலையத்திற்குள் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால், ஓ பன்னீர்செல்வத்தை வழி அனுப்பவும், வரவேற்று அழைத்துச் செல்லவும் யாரையும் அனுமதிக்க மாட்டோம். பி.சி.ஏ.எஸ் பாஸ் கொடுப்பதற்கும் தடை விதித்து விடுவோம் என்று எச்சரித்து அனுப்பினர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க புதிய முயற்சி; கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியது என்ன?